×

குடிசை மாற்று வாரிய கட்டிடம் விபத்து எதிரொலி: புளியந்தோப்பு பகுதியில் 80 குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் தீவிரம்

பெரம்பூர்: திருவொற்றியூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்ததன் எதிரொலியாக புளியந்தோப்பு பகுதியில் 80 குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அரிவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தன. இதில் 24 வீடுகள் தரைமட்டமாகின. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என பலரும் நேரில் சென்று ஆய்வு செய்து தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றைப் இடித்துவிட்டு புதிதாக குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பழைய கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியில் 1971ம் ஆண்டு கட்ட தொடங்கிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 1975ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

அந்த குடியிருப்புகள் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டன. ஏற்கனவே அந்த பகுதியில் சிதலமடைந்த கட்டிடங்கள் இடித்து புதிதாக கட்டிடங்கள் கட்டி அங்கு இருந்த மக்கள் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். தற்போது ஏ பிளாக், பி பிளாக் என இரண்டு பிளாக்குகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. இதில் உள்ள என்பது குடும்பங்களையும் புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் இந்த என்பது குடும்பங்களையும் அந்த பகுதிக்கு மாற்றும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு 80 குடும்பங்களும் பத்திரமாக அங்கு மாற்றப்பட்ட பிறகு பழுதடைந்துள்ள அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அந்த இடத்தை சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சியிடம் வழங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வியாசர்பாடி கோட்டம் நிர்வாக பொறியாளர் சந்திரமோகன் தலைமையில் தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரிய ஊழியர்கள் பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியில் உள்ள 80 குடும்பங்களையும் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியிலுள்ள வீடுகளுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Puliyanthoppu ,
× RELATED புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில்...