×

மாவட்டத்தில் 680 பள்ளிகளில் தடுப்பூசி பணிகள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதினருக்கு 680 பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, பூந்தமல்லி சுகாதார மாவட்டம் சார்பில் 15 முதல் 18 வயதிற்கான தடுப்பூசி முகாம் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று  நடைபெற்றது. முகாமை ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 86 சதவீதமும், 2வது தவணை 57 சதவீதம்  செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி போடுவதற்காக முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில், அரசு, தனியார், அரசு உதவி பெறும் 680 பள்ளிக்கூடங்களில் 40 குழுக்களாக சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதில், திருவேற்காட்டில் 2 பேருக்கும் கும்மிடிப்பூண்டியில் 2 பேருக்கும், மீஞ்சூரில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் கிராமம் முதல் நகரம் வரை நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று தொற்று குறித்து சோதனை செய்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி பகுதியிலும், தொற்று தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளும் நடக்கிறது. மேலும், பொதுமக்களும் முககவசம் அணிந்தும், சமுக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் செந்தில்குமார், ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா, ஆவடி மாநகராட்சி மருத்துவ அலுவலர் ஹசின், சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், மாநகர திமுக செயலாளர் ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Nasser ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...