வாகன விபத்தில் பலி என்எல்சி தொழிலாளியின் உறவினர்கள் போராட்டம்

நெய்வேலி, ஜன. 4:    நெய்வேலி வட்டம் 24, திராவிடர் தெரு, என்எல்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாலமோன்(58). இவர் என்எல்சி இரண்டாம் சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி என்எல்சி சுரங்கத்தில் இரவு பணிக்காக சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் முதலாவது சுரங்கம் அருகில் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. உடனடியாக சாலமோனை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சாலமோன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்  சாலமோன் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க கோரி நேற்று என்எல்சி இரண்டாம் சுரங்கம் முன்பு  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சாலமோன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் என்எல்சி அதிபரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: