நாகர்கோவில் கோர்ட்டில் பிரபல ரவுடிகள் ஆஜர் கேரள சிறையில் இருந்து அழைத்து வந்தனர்

நாகர்கோவில், ஜன.4: கேரள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குமரியை சேர்ந்த பிரபல ரவுடி உள்பட 3 பேர். பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான அருளானந்தம் மற்றும் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ராமசாமி, திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 3 பேர் மீது குமரி மாவட்டத்தில் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் இவர்கள் ஆஜர் ஆகாமல் இருந்தனர். எனவே இவர்களை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் இவர்கள் பற்றிய விசாரணையில் இறங்கிய போது, இவர்கள் மூவரும் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கூலிப்படையாக செயல்பட்டு, தொழிலதிபர் ஒருவரை கொலை செய்வதற்காக அங்குள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை காட்டி, இவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து ஆஜர்படுத்த குமரி மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்ெகாண்டனர். இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், திருச்சூர் சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார். இதையடுத்து இவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி அருளானந்தம் உள்பட 3 பேரும், கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். நேற்று இவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நாகர்கோவில் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீண்டும் இவர்கள் கேரள சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: