நெல்லை, தென்காசி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி

நெல்லை,ஜன.4:  நெல்லை, தென்காசி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் திறன் எய்தும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தன்(சமூக பாதுகாப்பு திட்டம்) தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட 18 நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் போன்ற நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களில் ஒரு லட்சம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் 2038 பேருக்கு திறன் எய்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொத்தனார், டைல்ஸ் பொருத்துபவர், மின்சாரவேலை, வர்ணம்பூசுபவர், குழாய்பொருத்துபவர், மரவேலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். எனவே பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், வசந்தம் அவென்யூ, திருமால்நகர், பெருமாள்புரம், நெல்லை என்ற முகவரியில் தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: