4 வழிச்சாலையில் சிப்காட் அருகே வளைவு சாலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியூ ஆர்ப்பாட்டம்

நெல்லை, ஜன.4:  கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் வளைவுச் சாலை அமைத்து தரக் கோரி நெல்லை சிஐடியூ வினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிஐடியூ மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் பெருமாள், தலைவர் செண்பகம், தாலுகா செயலாளர் சுடலைராஜ் மற்றும் நிர்வாகிகள், சிப்காட் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: நெல்லை அருகே அமைந்துள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகமானோர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்கின்றனர்.

சிப்காட் வளாகத்திலிருந்து நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு வளைவுச் சாலை (யு- டர்ன்) இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் 3 கி.மீ தூரம் சென்று நான்கு வழிச் சாலைக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தொழிலாளர்கள் வாங்கும் குறைவான சம்பளத்தில் பெட்ரோலுக்கு மட்டுமே அந்தப் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும் பல தொழிலாளர்கள் சிப்காட் நான்கு வழிச்சாலையில் தடுப்புகளை கடந்து செல்வது, எதிர்த்திசையில் ஒரமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பல சமயங்களில் விபத்துகளும் நடக்கின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வாக சிப்காட் வளாகத்திற்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் வளைவுச் சாலை அமைத்துக் கொடுத்தால் தொழிலாளர்கள் சுலபமாக சாலையை கடந்து செல்வர். மேலும் சிப்காட் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: