கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி மும்முரம்

முத்துப்பேட்டை, ஜன.4: கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் கனமழை பெய்ததால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை விடப்பட்டு நேற்று திறக்க இருந்த நிலையில் மழைநீர் சூழ்ந்து இருந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதனால் மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து மழைநீர் சூழ்ந்த பள்ளி வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திக், பள்ளி செயலர் ஹரிஹரன், பள்ளி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில் இதற்கு நிரந்தர தீர்வாக வடிகால் வசதி, மழைநீர் தேங்காமல் இருக்க சுற்றுசுவர் அமைத்தல், தரை மற்றும் மைதானத்தை உயர்த்துதல் போன்ற அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: