×

விராலிமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலையை புனரமைத்த தொல்லியல்துறை ஆர்வலர்கள்

விராலிமலை, ஜன.4: விராலிமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பல்லவர் கால அய்யனார் சிலையை மீட்ட தொல்லியல் ஆர்வலர்கள் புனரமைத்து அதே இடத்திலேயே வழிபாட்டிற்கு வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லெட்சுமணபட்டி, ஊராட்சி பண்டிதர்குடிவயல் கிராமத்தின் கண்மாயில், உடைந்த நிலையிலிருந்த 1000 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் தொல்லியல் ஆர்வலர்களால் நேற்றுமுன்தினம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோர் கூறியதாவது: பண்டிதர்குடிவயல் கண்மாயின் மேற்குபுறத்தில், இரண்டாக உடைந்த நிலையில் அய்யனார் சிற்பம் ஒன்று நீரில் மூழ்கி இருப்பதும், உள்ளூர் மக்கள் அய்யனார் என்று தெரியாமல், கூழட்டி பிச்சை என்ற பெயரில், சேவலை நேர்த்திக்கடனாக செலுத்தி, வணங்கி வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரியவந்தது. 4 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்த அய்யனார் சிலையானது, பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், புதுக்கோட்டை மாவட்ட அய்யனார் சிற்பங்கள், இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட வண்ணம் இருக்கும். இந்த சிற்பத்தில் சிறப்பு அம்சமாக, அய்யனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில், இந்த முறையில் அமைக்கப்பட்ட அய்யனார் சிலைகள், வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தில், இது போன்று கால் மாற்றிய நிலையில் அமர்ந்துள்ள, அய்யனார் சிற்பங்கள்,மிக அரிதாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிற்பத்தில், முகம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சிற்ப தோற்றத்தினை கொண்டு, இந்த அய்யனார் சிலை, 9ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் கால பலகை சிற்பம் என கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இது போன்ற எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றை முறைப்படி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Ayyanar ,Viralimalai ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு