லாலாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

கிருஷ்ணராயபுரம், ஜன.4: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி தலைமையிலான மருத்துவ குழுவினரால் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி முகாமினை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பார்வையிட்டார். குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் மாதேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர். குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் குளித்தலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ மாணிக்கம் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், நகர்ப்புற மருத்துவ அலுவலர் டாக்டர் அமீர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இம் முகாமை தொடர்ந்து குளித்தலை தொகுதி உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

Related Stories: