கரூர் ராயனூர் சாலையில் திறந்த நிலையில் வடிகால்

கரூர், ஜன. 4: கரூர் ராயனூர் சாலையில் தில்லை நகர் அருகே திறந்த நிலையில் உள்ள வடிகாலுக்கு சிலாப் அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து ஈசநத்தம், பாகநத்தம், திருச்சி பைபாஸ் சாலை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் வழியாக செல்கிறது.இதில், ராயனூர் தில்லை நகர்ப்பகுதியில் சாலையோரம் குறிப்பிட்ட தூரம் வரை திறந்த நிலையில் சாக்கடை வடிகால் உள்ளது. மிக ஆழமாக உள்ள இந்த சாக்கடை வடிகால் திறந்த நிலையில் உள்ளதால் அவ்வப்போது இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.இதனை சிலாப் கொண்டு மூட வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே, விபத்து அபாயத்தை உருவாக்கும் வகையில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகாலை சிலாப் கொண்டு மூடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: