×

வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்தித்து பேச பரோலில் வெளிவந்த நளினிக்கு அனுமதி வரும் 8ம் தேதி சந்திப்பதாக அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.4: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச பரோலில் வெளிவந்துள்ள நளினிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மனைவி நளினி ஒரு மாத பரோலில் கடந்த 27ம் தேதி விடுவிக்கப்பட்டார். தற்போது காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் சிறையில் நளினி, முருகன் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது பரோலில் வெளிவந்துள்ள நளினி, கணவன் முருகனை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்துள்ள சிறை நிர்வாகம், ‘நளினி-முருகன் சந்தித்துப் பேச தடை எதுவுமில்லை. நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க வரும்போது முகக்கவசம் அணிந்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’ என தெரிவித்தது. அதன்படி பரோலில் வந்துள்ள நளினி, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை வரும் 8ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nalini ,Murugan ,Vellore Central Jail ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது