வேலூர், ஜன.4: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 2021ம் ஆண்டில் 173 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நமது நாட்டில் திருமண வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கலாசாரம் பெரும் சாபக்கேடாக உள்ளது. சிறு வயது திருமணம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. உலகில் நடைபெறும் திருமணங்களில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைத் திருமணமாகும் என்று யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நம்நாட்டில் சிறுவர் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மாநில அரசுகள் மூலம் குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், வறுமை, போதிய கல்வியறிவு இல்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாகக் கருதுவது போன்றவைதான். இளவயது திருமணங்களைத் தவிர்க்க பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. குழந்தைத் திருமணங்கள் எங்கு நடைபெற்றாலும், அந்த இடத்துக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பெற்றோர்களுக்கு அறிவுரைகள் கூறி, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 173 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 85ம், ராணிப்பேட்டையில் 37ம், திருப்பத்தூரில் 51 என மொத்தம் 173 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டே தான் வருகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க வேண்டுமெனில் பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பெற்றோருக்கு கவுன்சலிங் வழங்க வேண்டும். அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்.