×

குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் பதுக்கிய விவகாரம் போலி பதிவெண் பயன்படுத்தி சொகுசு கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தல் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

குடியாத்தம், ஜன.4: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் பதுக்கிய 600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 2 பேர், போலி பதிவெண் பயன்படுத்தி சொகுசு கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரயில் நிலைய சாலையில் நேற்று முன்தினம் ஆந்திர பதிவெண் கொண்ட சொகுசு காருடன் நின்றிருந்த 2 பேரை மேல்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், வேலூர் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு(28), திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கத்தை சேர்ந்த கார்த்திக்(27) என்பதும், காட்பாடியிலிருந்து 2 சொகுசு கார்களில் 18 செம்மரக்கட்டைகளை கடத்தி, எம்.வி.குப்பத்தில் பழனி என்பவரின் நிலத்தில் பதுக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நிலத்தில் நிறுத்தியிருந்த மற்றொரு சொகுசு கார், 18 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் சுரேஷ்பாபு, நிலத்தின் உரிமையாளரான மேல்பட்டியை சேர்ந்த பழனி(50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 கார்கள், செம்மரக்கட்டைகள், கைது செய்யப்பட்ட பழனி, சுரேஷ்பாபு ஆகியோரை பேரணாம்பட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கார் டிரைவர் சுரேஷ்பாபு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வந்து பழனியின் நிலத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நான் காட்பாடியில் இருந்து செம்மரக்கட்டைகளுடன் நிற்கும் சொகுசு காரை ஓட்டிச் சென்று, பழனியின் நிலத்தில் இறக்கிவிட்டு மீண்டும் காட்பாடிக்கு சென்று காரை உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன். ஆக்டிங் டிரைவராக நான் இவ்வேலையை செய்தால் ₹10 ஆயிரம் கிடைக்கும். மற்றபடி வேறு எந்த விவரமும் எனக்கு தெரியாது’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நிலத்தின் உரிமையாளர் பழனியிடம் நடத்திய விசாரணையில், ‘அவ்வப்போது ஒரு சிலர் சொகுசு காரில் கொண்டு வந்து செம்மரக்கட்டைகளை எனது நிலத்தில் பதுக்கி வைப்பார்கள். சில நாட்களில் கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்காக பணம் தருவார்கள். ஆனால் அவர்கள் யார்? என்ற விவரம் தெரியாது. போலீசார் வருவதற்கு முன்பு கூட எனது நிலத்தின் அருகே ஒரு கார் நின்றிருந்தது. அதில், ராகுல் என்ற டிரைவர் இருந்தார். ஆனால், போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து அவர் தப்பியோடி விட்டார்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கார் டிரைவர் சுரேஷ்பாபு கைது செய்யப்பட்டபோது, அவரை யாரோ கண்காணித்து கொண்டிருந்துள்ளனர். இதனால் பழனியின் விவசாய நிலத்தில் நின்றிருந்த மற்றொரு டிரைவர் ராகுல் என்பவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறோம். தற்போது கைதான சுரேஷ்பாபு, பழனி ஆகிய 2 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரை பட்டியலிட்டு தேடி வருகிறோம்.
இந்நிலையில் செம்மரக்கட்டை கடத்தலுக்காக சொகுசு கார்களில் போலி பதிவெண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் உரிமையாளர்களை பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்கள் திருட்டு போனதாக போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. செம்மரக்கட்டைகள் வெட்டியவுடன் நேரடியாக விற்பனை செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இடத்துக்கு செம்மரக்கட்டைகள் கொண்டு சேர்க்கும் வரை டிரைவர்கள் பலர் செயல்பட்டுள்ளனர். இதனால் கைதானவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியவர்களின் செல்போன் எண்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர்கள் பட்டியலில் ஒவ்வொரு கட்ட விசாரணையிலும்ம் சங்கிலி தொடராக நீள்கிறது. விரைவில் செம்மரக்கட்டைகள் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...