×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கம்பம்மெட்டு வழியாக செல்ல ‘ரூட் மேப்’ ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா வழங்கினார்

கம்பம், ஜன. 3: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சர்வதேச புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில், வருகிற 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை தடுக்க, கடந்த டிச.19ம் தேதி முதல் கம்பத்திலிருந்து ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டு, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக சபரிமலைக்கு செல்கிறது. இது குறித்த ‘ரூட் மேப்’ வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா, கம்பம் புறவழிச்சாலையில் நின்று ஐயப்ப பக்தர்களுக்கு ரூட் மேப்பை வழங்கினார். அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், எஸ்ஐ நேரு உட்பட போலீசார் உடனிருந்தனர். போலீசார் கூறுகையில், ‘மண்டல பூஜை முடியும் வரை கம்பம்மெட்டு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு ரூட் மேப்பும், கம்பம், குமுளி வழியாக நடை பயணமாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிர் பட்டை (ஸ்டிக்கர்) வழங்கப்படும்’ என்றனர்.

Tags : ASP ,Shreya Gupta ,Kampametu ,Saparimalai Aiyappan Temple ,
× RELATED மணிப்பூரில் ஏஎஸ்பி கடத்தல் ஆயுத படையினர் போராட்டம்