×

இளையான்குடியில் அரசு நேரடி நெல்கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

இளையான்குடி, ஜன.3:    இளையான்குடி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையாங்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில்  நெல் விவசாயம் செய்துள்ளனர். இதில் என்.எல்.ஆர்.ஜோதி, டீலக்ஸ், ஆர்.என்.ஆர் உட்பட 10 வகை நெல் ரகங்களை நேரடி விதைப்பு மற்றும் வரிசை நடவு முறையில்  பயிரிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர்  மாதத்தில் பெய்த நல்ல மழையால் நெற் பயிர்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்து தற்போது அறுவடை பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இங்கு அறுவடை செய்த நெல்களை விவசாயிகள் பெரும்பாலும் தனியார் கமிஷன் கடை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகிறார்கள்.

 இந்த நிலையில் விவசாயிகள் நஷ்டமடைவதுடன், வியாபாரிகள்  அதிக லாபம் ஈட்டிச் செல்கின்றனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் நெல் விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இளையான்குடி வட்டாரத்தில்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை  திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை