மதுரை தொகுதியில் 86 பேருக்கு ரூ.2.3 கோடி நிவாரண தொகை எம்பி வெங்கடேசன் தகவல்

மதுரை, ஜன.3: மதுரை தொகுதியை சேர்ந்த 86 பேருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஒன்றிய அரசிடம் இருந்து, மருத்துவ நிவாரணத் தொகை ரூ.2.3 கோடி பெறப்பட்டுள்ளது என மதுரை எம்.பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தேசிய நிவாரண நிதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக எம்.பி.க்களிடம் ஏராளமானோர் மருத்துவ உதவி கோரி விண்ணப்பங்கள் கொடுக்கின்றனர். இதேபோல், என்னிடம் மருத்துவ நிவாரணம் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதனை முறையாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி, நிவாரண தொகை கோரி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கடந்த 2019ம் ஆண்டு 45 பேரும், கொரோனா ஊரடங்கு காலத்தில்37 பேரும், கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை 54 பேர் என  மொத்தம் 136 பேர் நிவாரணத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவ நிவாரணம் கேட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இதுவரை 86 பேருக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரத்து 500 நிவாரண உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நோயாளியும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 பெற்றுள்ளனர். இன்னும் 50 மனுக்கள் உதவித் தொகைக்காக நிலுவையில் உள்ளது’என தெரிவித்துள்ளார்.

Related Stories: