×

அனுமன் கோயில்களில் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

கோவில்பட்டி, ஜன. 3:அனுமன் ஜெயந்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜை, கும்ப கலச பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அனுமனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மந்தித்தோப்பு துளசிங்கநகரில் பூமாதேவி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், காலை 6 மணிக்கு நித்திய பூஜையும், 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெற்றிவேர் மாலை சாற்றி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் பூஜைகளை செய்தார். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

திருச்செந்தூர்: அனுமன் ஜெயந்தியை முன்னட்டு திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கோபூஜையை தொடர்ந்து கல்யாண கிருஷ்ணர் மற்றும் பெருமாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், மகாலட்சுமி, கருடாழ்வார், ராமனுஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் வரசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடு கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் ஒன்றிய அனுமன் சேனா சார்பில் சண்முகபுரம் விநாயகர் திடலில் ஒன்றிய தலைவர் தங்கராஜ் தலைமையில் அனுமன் ஜெயந்தி நடந்தது. ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.  இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் சத்திவேல், துணைத்’தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் பாலன், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, துணைத்தலைவர் ராஜேஷ், ஒன்றிய அமைப்பாளர் பால்ராஜ், உடன்குடி ஒன்றிய தலைவர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி:தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு அங்கு அமைந்துள்ள சுவாமி ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் போன்ற 7 வகையான பொருட்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Jayanti ,Hanuman temples ,
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு