×

நெல்லை மாவட்டத்தில் 75 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி இன்று முதல் செலுத்த ஏற்பாடு

நெல்லை,  ஜன. 3: நெல்லை மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுள்ள 75 ஆயிரம் சிறார்களுக்கு  இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா  வைரஸ்  கடந்த 2 ஆண்டுகளாக உலக  மக்களை  ஆட்டிப்படைக்கிறது. டெல்டா வகை  வைரஸ் 2  அலைகளாக உருவாகி பாதிப்பை   ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது  ஒமிக்ரான் வகை  வைரஸ் தொற்று உலகம்   முழுவதும் பல நாடுகளில்  ஊடுருவி விட்டது. ஒமிக்ரான்  தொற்று இந்தியாவிலும்   வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்  டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்  இணைந்து    3வது அலையாக  பரவத் தொடங்கியுள்ளது. இதனால்  தீவிர  தடுப்பு  நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3வது அலை ஏற்படத்தொடங்கியுள்ள நிலையில்  தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 15-18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை  மாவட்டத்தில் 15 முதல் 18 வயது பிரிவில் சுமார் 75 ஆயிரம் சிறார்கள்  இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் 24 ஆயிரம் சிறார்கள்  உள்ளனர். இவர்களுக்கு  இன்று முதல் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனிலும்  பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் முகாம் அமைத்தும்  தடுப்பூசி போட ஏற்பாடு செய்து வருகின்றனர். பெற்றோரிடம் அனுமதி கடிதம்  பெற்ற பின்னரே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். ஒமிக்ரான்  வைரஸ் பல நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களுக்கு அதிகம் பரவி வருவதால்  தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Nellai district ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...