முஷ்ணம், ஜன. 3: முஷ்ணத்தில் 1916ம் ஆண்டு அரசு மருந்தகம் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் 1956ல் உள்ளூர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் கட்டிடம் அமைக்கப்பட்டது. இதில் முஷ்ணம் மற்றும் சுற்றுபுறத்தில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்தோர் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு விபத்து மற்றும் கொலை தொடர்பான பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டு வந்தது. பின்னர் அ.தி.மு.க ஆட்சியின் போது சுகாதாரநிலையமாக மாற்றப்பட்டது. இதில் மகப்பேறு, குழந்தைநலம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம், முண்டியம்பாக்கத்திற்கு மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தி.மு.க ஆட்சியின் போது தற்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முயற்சியால் மருத்துவமனை தரம் உயர்த்தி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையமாக மாற்றி 30 படுக்கை வசதியுடன் இ.சி.ஜி, ஸ்கேன் அமைக்கப்பட்டு கர்ப்பிணிகள் இங்கேயே பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஏற்கனவே அமைக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள் பழுது ஏற்பட்டு பயன்பாடியின்றி உள்ளது.