காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த 15 வயது கர்ப்பிணி சிறுமி மருத்துவமனைக்கு சென்றபோது மாயம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த 15 வயது கர்ப்பிணி சிறுமி மருத்துவமனைக்கு சென்றபோது மாயமானதால், புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, இவருக்கு கடந்த 4 மாதமங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர், சிறுமி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி சிறுமியின் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், ரகசியமாக குழந்தை திருமணம் நடந்ததும், தற்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சிறுமியை மீட்டு பெரும்பாக்கம் சாலையில் உள்ள பெண் குழந்தைகள் வரவேற்பு மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியை வரவேற்பு மையத்தில் பணிபுரியும் ஜீவா என்ற பெண் ஊழியர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, டாக்டர் பரிசோதனை செய்து விட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர், சிறுமியை அமரவைத்துவிட்டு சிறுமியுடன் வந்தவர் டாக்டர் அறைக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனை வளாகத்தில் தேடி பார்த்துள்ளார். பின்னர், வரவேற்பு மையத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதுகுறித்து வரவேற்பு மைய கண்காணிப்பாளர் சங்கீதா, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Related Stories: