×

கும்மிடிப்பூண்டி அருகே கணவன், மனைவிக்கு ஒமிக்ரான் உறுதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சி நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஆண் அறுவைச் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கடந்த 15ம் தேதி சென்றிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 18ம் தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 19ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சென்னையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது ரத்த பரிசோதனையில் மாறுபாடு தெரிந்த காரணத்தினால் அவருக்கு ஒமிக்ரான் சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவருடன் இருந்த 34 வயதான அவரது மனைவிக்கும் பரிசோதனை செய்ததில் அவருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. பின்னர் இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து, இருவரும் நேற்று குணமாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் நொச்சிக்குப்பம் பகுதிக்கு விரைந்து மேற்கண்ட ஒமிக்ரான் தொற்று பாதித்த நபர்களை விசாரித்தனர்.

விசாரணையில் இருவருக்கும் மருத்துவமனைக்கு சென்ற பிறகு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதா அல்லது கடந்த 15ம் தேதிக்கு முன்பாகவே ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் 4 பேரை மருத்துவ அதிகாரிகள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், ஒமிக்ரான் தொற்று அச்சம் காரணமாக ஆரம்பாக்கம் நொச்சிக்குப்பத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Omigran ,Gummidipoondi ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...