பறிமுதல் வாகனங்கள் 4ம் தேதி ஏலம்: காஞ்சிபுரம் எஸ்பி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி. சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 14 காவல்நிலையங்களில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 1,817 இரு சக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என 1,858 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வழங்க இயலவில்லை. வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதாலும், தொடர்ந்து காவல்நிலையங்களில் இருப்பதாலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 1,858 வாகனங்களும் ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 4.1.2022ம்தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பறிமுதல் வாகனங்கள் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட குழுவினரால் ஏலம் விடப்படுகிறது. எனவே, ஏலத்தில் பங்குபெற இருப்போர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதமும், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதமும் உடனடியாக செலுத்தவேண்டும். மேலும் தங்களது ஆதார் கார்டு அசல் மற்றும் நகலை தவறாது கொண்டு வரவேண்டும். இவ்வாறு எஸ்பி கூறியுள்ளார்.

Related Stories: