கோவை வனக்கோட்டத்தில் 238 பறவைகள், 185 பட்டாம் பூச்சிகள் கணக்கெடுப்பு

கோவை, ஜன.3:  கோவை வனக்கோட்டத்தில் எடுக்கப்பட்ட பறவைகள், பட்டாம் பூச்சி கணக்கெடுப்பில் 238 பறவைகள், 185 பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோவை வனகோட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு கடந்த வாரம் நடந்தது. பறவைகள் கணக்கெடுப்பில் கோவை நேச்சர் சொசைட்டி, தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி மற்றும் டபிள்யூ.டபிள்யூ.எப்., இந்தியா ஆகிய மூன்று சூழல் அமைப்புகள் ஈடுபட்டன.

இதில், 68 சூழல் ஆர்வலர்கள், 14 குழுக்களாக பிரிந்து 7 வனச்சரங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். இவர்களுடன், உதவி வனப்பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் உட்பட, 42 வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர்.இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக்குமார் கூறுகையில்,``பறவைகள் கணக்கெடுப்பு வனத்தின் வளத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. வனமேலாண்மை திட்டத்துக்கு வனவிலங்குகளின் இருப்பு முக்கியமானது. இந்த கணக்கெடுப்பில், 238 பறவைகள், 185 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு அறிய வகை பறவைகளும் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

Related Stories: