×

மீன் பிடித்தபோது தவறி விழுந்தனர் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

திருவொற்றியூர்: கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த 2 வாலிபர்கள், நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, மணலி புதுநகர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், பலர் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். அதன்படி, வியாசர்பாடியை சேர்ந்த 8 பேர், நேற்று காலை மணலி புதுநகர் இடையன்சாவடி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமர்ந்து, தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களில் நிவாஸ் (22) என்பவர் எதிர்ப்பாராத விதமாக கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்தார்.

இவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து உடனிருந்த அஜித் (21) என்பவர், ஆற்றில் குதித்து, நிவாஸை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் இதுபற்றி மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 8 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அஜித் மற்றும் நிவாஸ் ஆகிய இருவரையும் நீண்ட நேரம் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று இரவு இருள் சூழ்ந்ததால் தொடர்ந்து டார்ச்லைட் மூலம் தேடும் பணி நடைபெற்றது.

Tags : Kosasthalai river ,
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...