×

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 அதிமுக நிர்வாகிகளை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் முன் நடந்தது

ஜோலார்பேட்டை, ஜன. 1: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ₹3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை தனிப்படையினர் அழைத்துச் சென்றதை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தலைமையில் எஸ்பி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ₹3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 15 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜியிடம் அதிக நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சிவகாசி தனிப் படை போலீசார் கடந்த 28ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் மற்றும் ஜோலார்பேட்டை அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகிய நிலையில் இருவரும் எங்கு இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் இவர்கள் குறித்து விபரம் தெரிய வேண்டுமென போலீசாரிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை போலீசாரிடமிருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை எனக் கூறியும், கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்கக் வேண்டும் எனவும் கூறி முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் உள்ளிட்ட போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிமுகவினர் கைது செய்யப்பட்ட இருவரையும் எங்கு உள்ளார்கள் என்ற விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணனிடம் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கலைந்து சென்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனால் திருப்பத்தூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனை அடுத்து திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட எஸ்பியை தொடர்பு கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற விக்னேஸ்வரன், ஏழுமலை ஆகிய இருவரையும் நேற்று போலீசார் விடுவித்தனர்.

Tags : Tirupathur SP ,
× RELATED ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு...