×

போலீஸ் குடியிருப்பில் தற்காலிக கடைகள் கட்டித் தர ஏற்பாடு பாளை. காந்தி மார்க்கெட் மீண்டும் அதே இடத்திற்கு மாற்றம்

நெல்லை, ஜன. 1:  பாளை. போலீஸ் குடியிருப்பில் தற்காலிக கடைகள் கட்டித் தர மாநகராட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததால், காந்தி மார்க்கெட்டில் பழைய இடத்திற்கு நேற்று முதல் காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையங்கள்  சீரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுபோல் நெல்லை  பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம், நேறு சிறுவர் கலையரங்கம், நெல்லை சந்திப்பு  பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து  வருகிறது.

பாளையில் காந்தி காய்கறி மார்க்கெட் கடைகள் அமைந்துள்ள  பழைய கட்டிடத்தை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கடைகள்  கட்டப்படுகிறது. பாளை. காந்தி மார்க்கெட்டில் காய்கறி,  வாழைக்காய் மொத்த விற்பனை, தேங்காய் மொத்த விற்பனை, பலசரக்கு, பழைய  பொருட்கள் விற்பனை, ஜவுளி, பழக்கடைகள், முட்டை, கோழி இறைச்சி உள்பட 540 கடைகள் உள்ளன. இந்த கடைகளை காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அப்போது காந்தி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக இயங்க பாளை. பழைய போலீஸ் குடியிருப்பு பகுதியில் காய்கறி கடைகளுக்கும், ஜவஹர் மைதானத்தில் ஜவுளி கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கும் தற்காலிக ஏற்பாடு செய்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது.

இதையடுத்து பாளை. காந்தி காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் அனைத்தும் பாளை. பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு தற்காலிகமாக இயங்கி வந்தன. பாளை. ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. பாளை. ஜவஹர் மைதானத்தில் 170 கடைகளுக்கு மட்டுமே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாளை. பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த காய்கறி கடைகள் அனைத்தும் நேற்று மீண்டும் பாளை. காந்தி மார்க்கெட் வளாகத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டன. இதனால் காய்கறி மார்க்கெட் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றமா என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து பாளை. காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் சாலமோன் கூறுகையில், தற்போது காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பழைய போலீஸ் குடியிருப்பு வளாகம் பகுதி மேடு, பள்ளமாக காணப்படுகிறது. மேலும் இங்கு மழைக் காலங்களில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே அந்த இடத்தை சமப்படுத்தி தற்காலிக தகர செட் அமைத்து கடைகள் அமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. தற்போது ஜவகர் மைதானத்தில் 170 கடைகளுக்கு தற்காலிக செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள் இயங்கும் எனவும், காய்கறி கடைகள், இறைச்சி, முட்டை என எஞ்சிய 370 கடைகளும் இயங்க பாளை. பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிக செட் அமைக்க வியாபாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. எனவே தற்காலிக செட் அமைக்கும் பணிக்காக காய்கறி கடைகளை ஏற்கனவே இயங்கி வந்த பாளை. காந்தி காய்கறி மார்க்கெட் வளாகத்திற்கு மாற்றியுள்ளோம். தற்காலிக கடைகள் அமைத்துத் தந்ததும் மீண்டும் கடைகள் அந்த பகுதியில் செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Gandhi Market ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...