வனத்துறை அனுமதி மறுப்பால் கிடப்பில் கிடக்கும் சாலை சீரமைப்பு பணி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வருசநாடு, ஜன. 1: கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிராமங்களில் வனத்துறை அனுமதி மறுப்பால், பல இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவைகளை மீண்டும் தொடங்கி சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு முதல் வாலிப்பாறை உள்ள மலைக்கிராமங்களில், கடந்த அதிமுக ஆட்சியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது பல இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறி, தார்ச்சாலைப் பணிக்கு தடை விதித்தனர். இதனால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டது.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விளைபொருட்களை, உரிய நேரத்துக்கு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, புதிதாக அமைந்துள்ள திமுக அரசு, வனத்துறையில் நிறுத்தப்பட்ட தார்ச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து மலைகிராமங்களிலும் சாலை அமைக்கும்போது வனத்துறை நெருக்கடி கொடுக்கிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் சாலைப் பணிகளை விட்டுவிட்டு, வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். எனவே, சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: