×

இரண்டாவது நாளாக நடந்த தொடர் சோதனையில் தமிழகம் முழுவதும் 2,512 ரவுடிகள் கைது

* 733 பேர் சிறையில் அடைப்பு * 950 பட்டாகத்தி, 5 துப்பாக்கிகள் பறிமுதல்சென்னை: தமிழகம் முழுவதும், 5 ஆயிரம் இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கடந்த 36 மணி நேரத்தில் 16,370 குற்றவாளிகள் சிக்கினர். இதில் தமிழகம் முழுவதும் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 733 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்பட 950 பயங்கர ஆயுதங்கள் மற்றும் 5 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில், மண்டல ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார்(வடக்கு), சுதாகர்(மேற்கு), பாலகிருஷ்ணன்(மத்திய), அன்பு(தெற்கு) மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட மாநகர போலீஸ் கமிஷனர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரது தலைமையில் போலீசார் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். வியாழக்கிழமை நள்ளிரவு துவங்கிய இந்த ரெய்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. சந்தேகப்படும்படியான நபர்களின் வீடுகளில் போலீசார் அதிரடியாக புகுந்து, ரெய்டு நடத்தினர். மேற்கு மண்டலத்தில், தனிப்படை போலீசார், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் அதிரடி வாகன தணிக்கை செய்தனர். அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வந்த வாகனங்களிலும் சோதனை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி காவல்நிலைய எல்லைக்குள் நடத்திய சோதனையில் கன்னுக்குட்டி என்கிற சிங்காரவேலு என்கிற பிரபல ரடிவுயை கைதுசெய்தனர். இவர், ஏ-பிளஸ் பட்டியலில் உள்ள அபாயகரமான ரவுடி. இதேபோல், குள்ளம்பட்டறை காவல் எல்லைக்குள் நடந்த சோதனையில் 3 துப்பாக்கி, 1 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்த ஒரு இன்னோவா காரை வழிமறித்து சோதனையிட்டபோது 217 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு மண்டலத்தில் 569 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு 135 ரவுடிகள் மட்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 31 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள்.மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடந்த அதிரடி ரெய்டில் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கத்தி, வீச்சரிவாள், சைக்கிள் செயின், சுருள் கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் 41 பேர், ராணிப்பேட்டையில் 30 பேர், திருப்பத்தூரில் 44 பேர், திருவண்ணாமலையில் 86 பேர் என வேலூர் பகுதியில் மட்டும் 201 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 37 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 90 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி., சுதாகர் தலைமையில் நடந்த ரெய்டில் 42 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகரில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகரில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த அதிரடி ரெய்டில் 10 மணி நேரத்தில், மொத்தம் 870 பேர் சிக்கினர். இவர்களிடமிருந்து, கத்தி, அரிவாள், துப்பாக்கி உள்பட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 870 பேரில் 400 பேர் கடும் குற்றச்செயலில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள். இவர்கள், அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 470 பேர் எச்சரிக்கப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைதான 400 ரவுடிகளில், 181 பேர் நீதிமன்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர்கள். அதைத் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்று அதிகாலை வரை சோதனை நடந்தது. நேற்று  மட்டும் 1,642 பேர் பிடிபட்டனர். அதில் 333 பேர் பழைய குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 2 நாள் நடந்த சோதனையில் 2512 பேர் சிக்கினர். அதில் 733 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1779 பேர் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மொத்தமாக 929 கத்திகள், 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் தொடர் சோதனை நடத்தப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்….

The post இரண்டாவது நாளாக நடந்த தொடர் சோதனையில் தமிழகம் முழுவதும் 2,512 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...