சின்னமனூர், ஜன 1: சின்னமனூர் அருகே, பொட்டிப்புரம் கிராம ஊராட்சியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளன; 135 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பண்புரிகின்றனர். இந்நிலையில், பள்ளியில் போதிய கணினிகள் இல்லை எனவும், சுற்றுச்சுவர் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏவை சந்தித்து, கணினி மற்றும் 600 மீ தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை கோரி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஓபிஎஸ், ‘தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணினி வழங்கி, ரூ.40 லட்சம் செலவில் 600 மீ சுற்றுசுவர் கட்டி தரப்படும் என உறுதி அளித்தார்.