×

ராமநாதபுரத்தில் சரணாலயங்களை புறக்கணித்த வெளிநாட்டு பறவைகள் காலநிலை மாற்றம் காரணமா?

சாயல்குடி, ஜன.1: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே  மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம். கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி, ராமநாதபுரம் அருகே தேர்தங்கல், சக்கரைகோட்டை ஆகிய  கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஆண்டு தோறும்  பருவமழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மாத கடைசி மற்றும் அக்டோபர் மாதங்களில்  கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும்  ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாட்டுகளிலிருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கம்.

அதில் தாழைகொத்தி, செங்கல்நாரை, நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய்மூக்கான், வில்லோவால்பவர், ஆஸ்திரேலேயா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைக்கிடா உள்ளிட்ட  50 வகைக்கு மேற்பட்ட பறவை இனங்கள் வரும். இதனைப் போன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, மனோலிகுட்டி தீவு போன்ற கடல்தீவு பகுதிகளில் நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல்திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள், கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் பலமைல் தூரம் கடல் கடந்து பறந்து வந்து இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டுகருவேல மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லும்.

இந்நிலையில் கடந்தாண்டு 2019ல் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் கண்மாய்களில் தண்ணீர் பெருகி ஓரளவு நிறைந்தது. இதனால் சரணாலயம் பகுதிகளில் சுமார் 40 வகைக்கும் மேலான பறவைகளும், தீவு பகுதிகளில் சுமார் 75ஆயிரம் பறவைகள் வந்ததாக அப்போது வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு, காலம் கடந்து ஜனவரி மாதமே நல்ல மழை பெய்தது. இந்தாண்டு அக்டோபர் மாதக்கடைசி முதல் மழை பெய்தாலும் கூட, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு சித்திரங்குடி, சக்கரகோட்டை, தேர்ந்தங்கல், காஞ்சிரங்குடி போன்ற கண்மாய்கள் பெருகி தண்ணீர் கிடக்கிறது. ஆனாலும், கடந்த 2019க்கு முன் ஏற்பட்ட தொடர் வறட்சி, கடந்த 2  வருடங்களாக காலம் கடந்து பெய்த மழை போன்ற காரணங்களால் பறவைகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பறவைகள் சரணாலயம் உள்ள கிராமமக்கள் கூறுகையில்,``கிராமங்களுக்கு விருந்தாளிகள் போல் வந்து ஆராவாரத்துடன், வட்டமிட்டு இங்கும், அங்கும் பறந்து மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் ரம்மீயமான சூழ்நிலை தரும் பறவைகள் இந்தாண்டு வராதது வருத்தமளிக்கிறது’’ என்றனர். பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில்,``ஆங்கிலேயர் காலம் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கிற்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயம் இருந்து வருகிறது. கடந்தாண்டுகளில் ஏற்பட்ட தொடர் வறட்சி, காலம் கடந்து பெய்த பருவமழை போன்ற காலநிலை மாற்றத்தால் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இன்னும் வரவில்லை. உள்ளூர் பறவைகள் இனமான நாரை, கொக்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளது. தாமதமாக வருவது வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...