கண்மாய்களுக்கு இடையிலான ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, ஜன.1: பேரையூர் அருகே எழுமலையை சேர்ந்த அய்யனார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்கள் ஊரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடக்கு பகுதியில் பெரியன்குளம் கண்மாயும், தெற்கு பகுதியில் கணக்கன்குளம் கண்மாயும் உள்ளன. பெரியன்குளம் கண்மாயில் நீர் நிரம்பினால் வண்ணா ஓடை வழியாக கனக்கன்குளம் கண்மாய்க்கு நீர் செல்லும். இரு கண்மாய்களையும் இணைக்கும் வகையில் வண்ணா ஓடை உள்ளது. இந்த ஓடை 1வது வார்டு பகுதியின் வழியே செல்கிறது. கனமழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து பாய்கிறது.

ஓடையை சுற்றி இருபுறமும் தடுப்புச்சுவர் இருந்தால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதை தடுக்கலாம். எனவே, பெரியன்குளம் கண்மாய் முதல் கணக்கன்குளம் கண்மாய் வரையிலான பகுதியில் வண்ணா ஓடையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கவும், ஓடையை முறையாக தூர்வாரி ஆழப்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் விசாரித்தனர். அரசு பிளீடர் திலக்குமார், அரசு கூடுதல் வக்கீல் சரவணன் ஆகியோர் ஆஜராகி சம்பந்தப்பட்ட பகுதியில் பாதையை கண்டறிந்து தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், பொதுப்பணித்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் பாதையை கண்டறிந்து தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணியை 4 மாதத்தில் முடிக்க வேண்டும். பணி முடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை 5 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: