×

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருமங்கலம், ஜன.1: திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வளர்மதி, ஆணையாளர்கள் சங்கர்கைலாசம், சவுந்திரராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன் திமுக கவுன்சிலர்கள் 8வது வார்டு முத்துபாண்டி, 9வது வார்டு பரமன், 15வது வார்டு சோனியா, 16வது வார்டு சாந்தி ஆகியோர் எழுந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தில் திருமங்கலம் யூனியனுக்கு ரூ.6.5 கோடி நிதி வந்துள்ளது. இதனை ஒன்றியத்திலுள்ள 38 பஞ்சாயத்துகளுக்கும் முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை. அதிகாரிகள் பாரபட்சமாக ஒருசில பஞ்சாயத்துகளுக்கும் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் சிவபாண்டி பேசுகையில், கொக்குளம், பாறைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கருதி அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் சங்கர்கைலாசம், ‘‘பள்ளிகளில் தரமான சத்துணவு தான் வழங்கப்படுகிறது. இருப்பினம் நீங்கள் குறிப்பிடுவது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையில் தரமற்ற சத்துணவு வழங்கப்பட்டது தெரியவந்தால் மாவட்ட கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் பேசுகையில், பிரதமமந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருமங்கலம் ஒன்றியத்தில் 215 பேர் வீடு கட்ட தகுதியாகியுள்ளனர்.

ஆனால் இவர்களிடம் இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் 10 ஆயிரம் வரையில் லஞ்சம் கேட்கின்றனர் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார். ஆணையாளர் சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், இது மாதிரி தவறுகள் நடக்காது. அப்படி யாரேனும் லஞ்சம் கேட்டால் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Thirumangalam ,Panchayat Union ,DMK ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி