×

1,000 கிலோ கஞ்சா, 5,700 லிட்டர் மதுபானம் பறிமுதல் 2021ல் குண்டர் சட்டத்தில் 81 ரவுடிகள் கைது மதுரை போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை, ஜன.1:  மதுரை நகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியிருப்பதாவது: மதுரை நகரில் 2021ம் ஆண்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள 1550 சரித்திர பதிவேடு ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். 2021ல் 35 கொலைகள் பதிவானது. இவ்வாண்டில் திருடப்பட்டு காணாமல் போன 179 இருசக்கர வாகனங்கள் மற்றும் 500 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டில் 587 போதைப்பொருள் கஞ்சா விற்பனையாளர்கள் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடி மதிப்புள்ள 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 543 விற்பனையாளர்கள் மீது சிஓடிபிஏ சட்டத்தின் கீழ்  (சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம்)  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.30 லட்சம்  மதிப்புள்ள 6500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காகவும், வைத்திருந்ததற்காகவும் 2980 பேர் கைது செய்யப்பட்டு ரூ.72 லட்சம் மதிப்புள்ள 5700 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. 2021ல் 81 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 9,16,639 வழக்குகள் பதிவு செய்து, ரூ.6,45,29,600 அபராதம் விதிக்கப்பட்டது. 2021ல் மாநகரக் காவல்துறை மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி காவல் பணியை மிகவும் திறம்படச் செய்தது.

தெருக்களில் காவல்துறை ரோந்தை அதிகரிக்க இ-பீட் மொபைல் பயன்பாடு பயன்படுத்தப்பட்டது. சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகளை மொபைல் போன்கள் மூலம் அடையாளம் காண, பேஸ் ரெககனைசன் அப்ளிகேசன் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. சுமார் 100 ரோந்து காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்கள் வழங்கப்பட்டன. 16 ஆயுதம் ஏந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை, நகரின் 2500 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 11,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்