×

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையான ரயில்வே சுரங்க பாதை மண்ணுக்குள் புதைந்து போனது மக்கள் வரிப்பணம்

திண்டுக்கல்: திண்டுக்கல்- திருச்சி சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பால சுரங்க பாதையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி பாதாள சாக்கடை போல் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் நகரில் இருந்து திருச்சி சாலையை இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்கள் நடந்து செல்வதற்காக இதன் கீழ் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சுரங்க பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் தற்போது கொசுக்களின் உற்பத்தி மையமாக திகழ்கிறது. சிறியளவில் மழை பெய்தாலும் சுரங்க பாதை நிறைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. தற்போது மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி சுரங்க பாதை பாதாள சாக்கடை போல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவே இதுபோன்ற சுரங்க நடைபாதை கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு உருவாக்கப்பட்ட இந்த சுரங்க பாதை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா, வரவில்லையா என்பதே இதுவரை மக்களுக்கு தெரியாத அளவிற்கு கட்டிய நாள் முதல் தற்போது வரை மழைநீர், கழிவுநீரின் இருப்பிடமாக திகழ்கிறது. இதில் கொசுக்களும் பல்கி பெருகுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். மக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படாமல் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் சுரங்க நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...