புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஊட்டி: நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவு 12 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி விடும். இதனால்  ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்ட்டுக்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவு தங்கியுள்ளனர். இன்றும், நாளையும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க நீலகிரி காவல்துறை அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர். மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புத்தாண்டு தினத்தன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சுற்றுலா தலங்களுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால், அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்படும். அதனால் இன்று 31ம் தேதி இரவு முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்படுவார்கள். மேலும், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

சுற்றுலா தலங்களில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில், விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வழக்கம் போல் வாகன தணிக்கை, லாட்ஜ்களில் சோதனை பணிகள் மேற்கொள்ளப்படும். விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்வர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: