நீலகிரி மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் நடப்பாண்டில் தடுத்து நிறுத்தம்

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருந்தது. பெற்றோர்களே வறுமையை காரணம் காட்டி குழந்தை திருமணம் செய்வது அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 15 குழந்தை திருமணங்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உரிய வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத்தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அமைப்புகள், திருமண தரகர் அனைவரும் குற்றம் செய்தவராகக் கருதப்படுகின்றனர். மேலும் குழந்தைத் திருமணத்தில் ஈடுபடும் செயலானது பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.

2 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை அல்லது ரூபாய் ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்தால் மாவட்ட சமூகநல அலுவலர் - 9655988869, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- 9715310135, சைல்டு லைன்- 1098, ஒருங்கிணைந்த சேவை மையம் - 9943040474, பெண்களுக்கான இலவச உதவி எண் - 181 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Related Stories: