ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை பைக் ரேஸ், போதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

திருச்சி, டிச.31: ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் ரேஸ், குடி போதையில் வாகனங்கள் ஓட்டி வருவதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி ஒட்டல்கள், கடைகள் வழக்கம் போல் செயல்படலாம். மேலும், ஓட்டல்கள் அதனையொட்டி உள்ள பார்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. மீறி கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வாழ்த்து கூறுவதாக பெண்கள் அல்லது சாலையில் செல்பவர்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து முன்னெச்சரிக்கையாக அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார், பீட் போலீசார், பீட்டா ரோந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சர்ச் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸ்சில் ஈடுபடுபவர்களை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள், முக கவசம் இன்றி வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: