×

சேலம் இரும்பாலையில் மயான வசதி கேட்டு மக்கள் சாலைமறியல்

சேலம்: சேலம் இரும்பாலை தளவாய்பட்டி சத்யாநகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தளவாய்பட்டி ஏரியின் ஒரு பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அந்த பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகள், குடியிருப்புகள் கட்டுவதற்காக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே இருந்த 4 சமாதிகளை மண் கொட்டி நிரப்பி, நிலத்தை எடுத்துக் கொண்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களுக்கென தனியாக மயானவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இரும்பாலை மெயின்ரோட்டில் 60க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அங்கு, மயானவசதி கேட்டு இரும்பாலை-சேலம் சாலையில் பால்பண்ணை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த இரும்பாலை இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வருவாய்த்துறையினரும் வந்து, மயானவசதி ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Salem Iron Ore ,
× RELATED நவம்பரில் மட்டும் ரூ1 கோடி லாபம்; சேலம்...