புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இன்று (31.12.2021)  இரவு நடத்தப்படும் 2022ம் ஆண்டு புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொது இடங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் இதுபோன்ற இதர இடங்களில் (31-12-2021)அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஒமிக்ரான் வகை பரவலையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே கோவை மாவட்டத்தில் 31ம் தேதி (இன்று) இரவு நடத்தப்படும் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: