×

கடலூரில் காணாமல் போன கார் தஞ்சாவூரில் அதிரடியாக மீட்பு

கடலூர், டிச. 31:கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பத்தில் தனியார் கார் நிறுவனம் உள்ளது. இங்கு கடலூர் முதுநகரை சேர்ந்த தேவதாஸ் என்பவர் கடந்த 15ம் தேதி தனது காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்தார். இந்நிலையில் சர்வீஸ் முடிந்து காரை தேவதாசிடம் ஒப்படைப்பதற்காக அந்தக் கார் நிறுவனத்தின் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த கார் கடந்த 24ம் தேதி காணாமல் போனது. இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கார் கம்பெனியில் வேலை செய்து வந்த வசந்தகுமார் மற்றும் அவரது நண்பரான டிங்கர் மணி ஆகியோர் கடலூரை சேர்ந்த நவாப் என்பவர் மூலம் காரை திருடிச்சென்று, தஞ்சாவூர் எம்.சாவடியை சேர்ந்த அப்துல்கனி மகன் அஸ்ரப் பாஷா (41) என்ற கார் புரோக்கரிடம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தஞ்சாவூர் சென்று எம்.சாவடி, முஸ்லிம் தெருவை சேர்ந்த அஸ்ரப் பாஷாவை கைது செய்தனர். விசாரணையில் திருட்டு கார் என தெரிந்தும் மற்றவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அஸ்ரப் பாஷா காரை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் காரை திருடி சென்ற முக்கிய குற்றவாளிகளான வசந்தகுமார், டிங்கர் மணி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...