புதுச்சத்திரத்தில் கட்டிடம் இடிக்கப்படுவதை தடுக்க ஜாக்கி மூலம் கட்டிடத்தை நகர்த்தும் பணி தீவிரம்

புவனகிரி, டிச. 31:  விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையை தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் வீடுகள், கடைகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு கடையின் கட்டிடத்தை இடிப்பதற்காக அளவீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டிடத்தை இடிக்க விரும்பாத உரிமையாளர் சிவசுப்ரமணியம் என்பவர், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டிடத்தை நகர்த்துவதற்காக முடிவு செய்தார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் ஆயிரத்து 150 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடம் சுமார் இரண்டரை அடி உயரத்திற்கு ஜாக்கிகள் மூலம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 30 அடி தூரம் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு இந்த கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதிய அஸ்திவாரத்தில் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 10 பேர் இந்த நவீன தொழில் நுட்ப பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக சதுர அடி ஒன்றுக்கு 650 ரூபாய் வீதம் சுமார் ரூ.7.50 லட்சம் வரை கூலியாக செலவாகும் என கூறப்படுகிறது. மேலும் புதிய அஸ்திவாரம் அமைப்பதற்கான செங்கல், சிமெண்ட், ஜல்லி போன்ற பொருள்கள் சுமார் ரூ.3 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது.

Related Stories: