×

பொங்கல் பண்டிகையையொட்டி வி.கே.புரம் பகுதியில் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்

வி.கே.புரம், டிச. 31:  வி.கே.புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள், பொங்கலையொட்டி அறுவடைக்கு தயாராகி உள்ளன. ஓரிரு நாட்களில் கரும்புகளை வெட்டி அனுப்பும் பணி துவங்குகிறது. கரும்பு என்றால் இனிப்பு, இன்பம் ஆகும். தைப்பொங்கல் திருநாளில் கரும்பை உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வது வழக்கம். இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள்‌ வரை  பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு நினைவுதான் முதலில் வரும். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வி.கே.புரம் டாணா, அனவன்குடியிருப்பு பகுதியில் தைத்திருநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில நாட்களில் கரும்புகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லும் பணி துவங்குகிறது.  இதுகுறித்து அனவன்குடியிருப்பை சேர்ந்த விவசாயி சந்திரன்(38) கூறும்போது, இந்தாண்டு கரும்புகள் நல்ல விளைச்சல் பெற்றுள்ளன. எங்கள் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக  கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300க்கும், குறைந்தபட்சம் ரூ.250க்கும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இப்பகுதியில் அதிகபட்சமாக தேனி கரும்பும் குறைந்தபட்சமாக நாட்டு கரும்பும் பயிரிடப்பட்டு உள்ளன. அடுத்த வாரம் முதல் வியாபாரிகள் கரும்புகளை வெட்டி எடுத்துச் செல்வார்கள், என்றார்.

Tags : VKpuram ,Pongal festival ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு