×

சுவாமிமலை முருகன் கோயில் 60 படிகட்டுகளில் சித்திரை முதல்நாள் மட்டுமே சிறப்பு பூஜை செய்ய வேண்டும்


கும்பகோணம்,டிச.31: கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தமிழ் வருடங்களை குறிக்கின்ற 60 படிக்கட்டுகளை சித்திரை முதல் நாள் அன்று மட்டுமே சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுமன் சேனா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலா மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ் கடவுள் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தமிழ் வருடங்களை குறிக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 படிக்கட்டுகள் உள்ளன. சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பின் போது 60 படிக்கட்டுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து அந்த ஆண்டிற்கான நன்மை தீமைகள் குறித்து பஞ்சாங்கம் வாசித்து பக்தர்களுக்கு தெரிவிப்பது வழக்கம். தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் உடைய படிக்கட்டுகள் உள்ள திருக்கோயில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐதீகம் சுவாமிமலை முருகன் கோவிலில் மட்டுமே நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு அன்று 60 படிகளுக்கும் பூஜைசெய்து ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் சுவாமிமலை திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. இச்செயல் தமிழ் விரோத போக்காகும். இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறோம். தமிழ் கடவுளாக எல்லோராலும் போற்றி வணங்கக்கூடிய முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக ஆங்கில புத்தாண்டு அன்று தமிழ் ஆண்டுகளை குறிக்கக்கூடிய படிக்கட்டுகளுக்கு பூஜை செய்வது முற்றிலும் ஆகம விதிகளுக்கு எதிரானது. இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று தமிழ் ஆண்டுகளை குறிக்கக்கூடிய படிக்கட்டுகளுக்கு பூஜை செய்ய முயற்சித்தால் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Swamimalai Murugan Temple ,Chittirai ,
× RELATED கொட்டரை கிராமத்தில் விவசாயம் செழிக்க...