×

கருமத்தம்பட்டி நகராட்சியில் வார்டுகள் வரையறை செய்யும் பணி தீவிரம்

சோமனூர்: சோமனூர் நகரம் கருமத்தம்பட்டி பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து இதன் வார்டு வரையறையில் தற்போது அனைத்து பணியாளர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்குப் பிறகு முன்பு இருந்த 18 வார்டு தற்போது 27 வார்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வார்டு வரையறை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் முறையாக நடத்தப்படாத சூழ்நிலையில், முன்னாள் கவுன்சிலர்களும், பொதுமக்களும் வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சோமனூர், கருமத்தம்பட்டி,செந்தில்நகர்,கிருஷ்ணாபுரம்,பூலக்காடு, ராயர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வார்டு வரையறையானது குளறுபடியாக உள்ளது. இந்த வரையறையை இறுதியானது அல்ல உத்தேசபட்டியல் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கருமத்தம்பட்டி நகராட்சியில் எந்த ஒரு ஊராட்சி நிர்வாகத்தையும் இணைக்காமல் தனி ஒரு பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், 27 வார்டுகளில் வாக்காளர்கள் பெயர்கள் பிரிப்பதில் பாகம் எண், வரிசை எண் சிதறிக் கிடப்பது வாக்காளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் கலெக்டர் உத்தரவின் பேரில், வார்டு வரையறை முறையாக செய்வதில் வாக்காளர்களை உரிய அந்தந்த வார்டுகளில் சேர்க்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சியில் நடைபெறும் வரிவசூல், வீட்டுமனைஅங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் 27 வார்டுகளின் எல்லை வரைபடமும், இறுதி வாக்காளர் பட்டியலும் உடனடியாக சரி செய்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karumathampatti ,
× RELATED கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா