×

ஆர்வமுடன் வரும் சிறுவர், சிறுமிகள் ஏமாற்றம் பாளை வஉசி மைதானத்தில் உடைந்த விளையாட்டு உபகரணங்கள்

நெல்லை, டிச. 30: பாளை  வஉசி மைதானத்தில் சிறுவர் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் இருந்து வருவதால் விளையாட வரும் சிறுவர், சிறுமியர் ஏமாற்றம் அடைகின்றனர்.
பாளையின் மையப்பகுதியில் வஉசி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு உள்ள விளையாட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டு மேற்கூரையுடன் கூடிய கேலரிகள் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. இதே வளாகத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானப்பகுதியில் உள்ளே வந்து செல்ல தனிப்பாதை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். மாலை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகம் பேர் இங்கு வந்து பொழுதை போக்கிச்செல்கின்றனர்.

மேலும் பலர் நடைபயிற்சி செய்வதற்காகவும் வந்து செல்கின்றனர். இந்த விளையாட்டு மைதானத்தில் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பல உடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது. ஊஞ்சல் உள்ளிட்டவை இல்லை. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப பொம்மைகளும் உடைந்து உள்பகுதியில் உள்ள காங்கிரீட் கம்பிகள் அபாயகரமாக வௌியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனால் இங்கு விளையாடி பொழுதை போக்க ஆவலுடன் வரும் குழந்தைகள், சிறுவர் சிறுமியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே இந்த பூங்காவில் உள்ள உடைந்த விளையாட்டுப்பொருட்களை உடனே சீரமைக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பூங்காவின் உள்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் சுத்தப்படுத்தாமல் குவிந்து கிடக்கின்றன. இவற்றையும் அப்புறப்படுத்தி சுத்தமாக்கி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது இங்கு வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Pali Wausi ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...