கள்ளக்குறிச்சி வன்னியர் சங்க கட்டிடம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

கள்ளக்குறிச்சி/சிதம்பரம், டிச. 30: தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர் பொதுசொத்துக்களை வன்னியர் நலவாரியத்தில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கள்ளக்குறிச்சி வன்னியர் சங்க கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், கள்ளக்குறிச்சி நகரத்தில் அமைந்துள்ள நகர வன்னியர் சங்கத்தின் சார்பில் கட்டப்படுகின்ற திருமண மண்டபம் மற்றும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கட்டிடத்தை பார்வையிட்டேன். 2010ம் ஆண்டு கட்டிட பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிகளை மீண்டும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் வன்னியர் அமைப்புகள் மூலமாகவும், மறைந்த பல வன்னியர்களின் மூலமாக வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் அறகட்டளை மூலம் இயங்கி வருகின்ற சொத்துக்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? என்பதை வன்னியர் பொதுசொத்து நலவாரியம் ஆய்வு செய்து வருகிறது, என்றார். அப்போது தமிழ்நாடு வன்னியர் பொதுசொத்து நலவாரிய தலைவர் சந்தானம், எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள பச்சையப்பன் பள்ளி அருகே வன்னியர் வளர்ச்சிக் கழகத்தின் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவர் சந்தானம் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். பின்னர் அவர் கூறுகையில், சிதம்பரத்தில் வன்னியர் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பின் கீழ் இயங்கி வந்த மாணவர் விடுதி பின்னர் செயல்படாமல் போய்விட்டது. வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் மூலமாக இங்கு உள்ள கட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்றார். சிதம்பரம் நகர திமுக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: