×

ஆரணியில் ஒமிக்ரான் தொற்று பாதித்த பெண்ணின் தம்பிக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவண்ணாமலை, டிச.30: ஆரணியில் ஒமிக்ரான் தொற்று பாதித்த பெண்ணின் தம்பிக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியானது. எனவே, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றினால் இதுவரை 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுளளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூரை சேர்ந்த 38 வயது பெண், மத்திய ஆப்ரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12ம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதைத்தொடர்ந்து, அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. எனவே, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், அவரது குடும்பத்தினருக்கு நடத்திய சோதனையில் அவரது தந்தைக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அவரையும், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் தற்போது தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தம்பிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், ஒமிக்ரான் அறிகுறிகளும் காணப்பட்டது. எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியும் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு நேற்று வெளியானது. அதில், 32 வயதுள்ள அந்த இளைஞருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, அவரை அரசு மருத்துவமனையில் உள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டுக்கு நேற்று மாற்றினர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், அந்த இளைஞரின் உடல் நலன் நல்ல நிலையில் உள்ளது. ஆக்சிஜன் தேவை எதுவும் இல்லை. தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது, தொற்று இல்லை என தெரியவந்தால், உடனடியாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்றனர்.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...