இந்தியா வளர்ச்சி அடைந்ததற்கு நேருவும், காங்கிரஸ் கட்சியும் தான் காரணம்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வங்காளதேச விடுதலையின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் விழா கருத்தரங்கம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: வங்காளதேசம் விடுதலை பெற்ற 50வது ஆண்டை கொண்டாடும் விதமாக விழா எடுத்த பிரதமர் மோடி, வங்காளதேச விடுதலைக்கு காரணமாக இருந்த இந்திராகாந்தியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆர்எஸ்எஸ், பாரத ஜனசங்கம், இந்து மகா சபா, பாஜவை சேர்ந்த ஒருவர் கூட விடுதலை போராட்டத்திற்காக ஒரு மணி நேரம் கூட சிறையில் இருந்தது கிடையாது. நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு நேருவும், காங்கிரஸ் கட்சியும் தான் காரணம்.

நேருவை பற்றி தவறான கருத்துக்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில், நேருவை பற்றி தவறாக பேசிய எச்.ராஜாவை வன்மையாக கண்டிக்கின்றேன்.  இவ்வாறு அழகிரி பேசினார். கருத்தரங்கில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமுர்த்தி, சென்னை மாவட்ட தலைவர்கள் முத்தழகன், ரஞ்சன் குமார், மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட பொருளாளர் ஆர்.சுரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர் மணலி கீர்த்தி, மாநில செயலாளர்கள் தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன், வட சென்னை ரஞ்சித், முனிஸ்வர் கணேஷ் மற்றும் சர்க்கிள் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: