திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பெண் குணமடைந்தார் நாளை டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை

திருவண்ணாமலை, டிச.28:  திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்துள்ளதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக, ஒன்றியக்குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு வந்த 38 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நடத்திய பரிசோதனையில், அப்பெண்ணின் தந்தைக்கும் ஒமிக்ரான் உறுதியானது.

எனவே, கடந்த 17ம் தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதையொட்டி, அந்த வார்டில் 24 மணிநேரமும் மருத்துவ குழுவின் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை விபரங்கள், முன்னேற்றங்கள் குறித்து தினமும் தமிழக சுகாதார துறைக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் தொற்று கண்டறியும் பரிசோதனை நடந்தது.

அதன் முடிவு நேற்று வெளியானது. அதில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை (நெகடிவ்) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில் ஆக்சிஜன் தேவை எதுவும் இல்லாமல் முழுமையாக குணமடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர். எனவே, மேலும் 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து, நாளை டிஸ்சார்ஜ் செய்ய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் தந்தைக்கு நேற்று மீண்டும் தொற்று கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று வெளியாகும் என தெரிகிறது. அவருக்கும் தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தால், 2 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: