×

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு எஸ்பி வழங்கினார்

திருவண்ணாமலை, டிச.28: திருவண்ணாமலையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பவன்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் குறும்பட போட்டிகள் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி, போதை பொருட்களை தவிர்ப்போம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு குறும்பட போட்டி கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அப்போட்டியில் பங்கேற்ற பலரும் குறும்படங்களை இணைவழி மூலம் அனுப்பினர்.

அதில், தன்வினை எனும் குறும்படத்தை இயக்கிய திருவண்ணமாலை சமுத்திரம் நகரை சேர்ந்த எஸ்.சத்யராஜ் முதல் பரிக்கும், போதை எனும் குறுப்படத்தை இயக்கிய வந்தவாசி பூங்கா நகர் ஆர்.பாஸ்கரன் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் 2ம் பரிசுக்கும், விளைவு எனும் குறும்படத்துக்காக திருவண்ணாமலை மத்தலாங்குளத்தெரு எம்.தமிழ்ச்செல்வன் 3ம் பரிசுக்கும், 21 நாட்கள் எனும் குறும்படத்துக்கு வந்தவாசியை சேர்ந்த அப்துல்ரகுமான் மற்றும் பாஸ்கரன், தந்தையின் அன்பு எனும் குறும்படத்துக்கு வந்தவாசியை சேர்ந்த பி.மனோஜ்குமார் ஆகியோர் ஆறுதல் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், குறும்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேடயம் மற்றும் பாராட்டு சான்றுகளை எஸ்பி பவன்குமார் வழங்கினார். மேலும், சமுதாயத்துக்கு பயன்தரும் வகையில் தங்களுடைய கலைத் திறமைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags : SP ,Drug Awareness Short Film Competition ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...